×

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம்

* திருக்குவளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
* 234 தொகுதிகளிலும் அனைத்துக்கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருக்குவளையில் உள்ள பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை இன்று காலை தொடங்கி வைக்கிறார். அதேபோன்று 234 தொகுதிகளிலும் அனைத்துக்கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசு தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம், தொடங்கப்பட்ட நாள்முதல், மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, நல்ல பயன் அளித்து வருகிறது. இந்த திட்டம், தமிழ்நாட்டு மக்களிடையே மட்டுமின்றி, பிற மாநில மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு அதிகரித்துள்ளது தெரியவந்ததால், பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 31,008 அரசு தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 15.75 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்தது.

இதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதில் திட்டத்தின் பணிகளை கண்காணிக்க வட்டார வளர்ச்சி அளவில் ஒரு ஆசிரியரை பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலினும் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் பெரிதும் துணை நிற்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து காலை உணவு திட்டத்தை இப்போது மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை இன்று காலை 8.15 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் அதே வேளையில் 234 தொகுதிகளிலும் அமைச்சர்கள் மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, பாமக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அந்தந்த தொகுதியில் உள்ள பள்ளியில் நடைபெறும் காலை உணவு திட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்துக்கட்சி எம்பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,‘‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 25ம் தேதி (இன்று) முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டத்தில் நான் தொடங்கி வைக்க உள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்த திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளனர். மக்கள் பிரதிநிதிகளாகிய திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்த எம்பி, எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளி ஒன்றில் இந்த சீர்மிகு திட்டத்தினை தொடங்கி வைத்து சிறப்பித்திட வேண்டும்” என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Tiruvulalai ,CM ,G.K. Stalin ,MB ,Chennai ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...